திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!
1. வேங்கட மலை:
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின்
தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி
தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை
‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.
7. ஆனந்த மலை:
ஆதிசேஷன்,
வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும்
ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர்
பெற்றது.
திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்
திருப்பதி திருமலையில்,
1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்
என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.
1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவர்தான்
மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர்.
இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி,
பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த
மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும்
வந்து வணங்குவதாக ஐதீகம்.
2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவர்,
கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள்
என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத
இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது.
புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம்
நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில்
வெள்ளியினாலான பெருமாள் இவர்.
3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :
கொலுவு
என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும்
ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய
பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர்
விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார்.
இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள
முடியாது.
4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :
இவருக்கு
வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே
பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய
ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள்
நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச்
செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம்
கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி
பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.
5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :
இவருக்கு
மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும்
உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக்
காட்சியளிப்பவர் மலையப்பர்.
சமீப
வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின்
குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும்
மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம்
நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு
No comments:
Post a Comment